நமக்கு ஏதேனும் ஒரு நல்ல விஷயம் தெரிய வந்தால் அதை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது, அந்த விதத்தில் சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம் வேளச்சேரி கே.எஸ் மருத்துவமனை (K.S. Hospital , Velachery) . எனது நெருங்கிய நண்பன் முபாரக் அலி அவனது மனைவி யாஸ்மினுக்கு பிரசவ வலி வந்து விட்டதால் கே.எஸ் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தெரிவித்ததும் உடனே அங்கு விரைந்தேன், பொதுவாக மருத்துவமனை என்றதுமே மருந்து நெடியும் , நர்சுகளின் அதட்டல்களுமே (சார் விசிட்டிங் ஹவர் முடிஞ்சுரிச்சு இங்க நிக்காதீங்க கிளம்புங்க!!!) எனது நினைவுக்கு வரும் ஆனால் இந்த மருத்துவமனையின் உள்ளே நுழைந்ததுமே ஒரு நெருங்கிய நண்பரின் வீட்டினுள் நுழைந்ததைப் போல் உணர்ந்தேன் (சற்று மிகைப்படுத்தி கூறுவது போல் தோன்றலாம் ஆனால் நேரில் சென்று பார்த்தால் நீங்களும் இதை உணர்வீர்கள்), அதை விட ஆச்சரியம் அங்கு வேலையில் இருக்கும் யார் முகத்திலும் வழக்கமாக மருத்துவமனை சிப்பந்திகளிடம் காணப்படும் கடுகடுப்பு அறவே இல்லை இதிலிருந்தே இது மற்ற மருத்துவமனைகளில் இருந்து சற்று மாறுபட்டது என்பதை உணர முடிந்தது. வெளிப்புற தோற்றத்திற்க்கு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பைப் போல் தோற்றமளித்தாலும் உள்ளே சென்றவுடனே ஒரு உயர்தர சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட மருத்துவமனை அது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
எனது நண்பன் முபாரக் பிரசவ அறைக்கு முன் கவலையாக அமர்ந்திருந்தான் உள்ளே பிரசவ வலியில் யாஸ்மின் அலறுவது கேட்ட வண்ணம் இருந்தது. உள்ளிருந்து நர்சுகள் வெளியே வரும் போதும் போகும் போதும் ஆறுதலாக ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு சென்றது சற்று பயத்தைக் குறைத்தது , அந்த மருத்துவமனையைப் பற்றி பெரும்பாலான விஷயங்களை முபாரக்கிடம் இருந்து அறிந்து கொண்டேன் ,அதன் பின்னர் தான் இந்த பதிவை எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மருத்துவமனையின் தலைமை மகப்பேறு மருத்துவர் பாலகுமாரி ( இவரைப் பற்றி பேச ஆரம்பித்தாலே சகோதரி யாஸ்மினின் முகத்தில் வெளிச்சம் வந்து விடுகிறது), தனது உரையாடலின் மூலமாகவே பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் ஏற்படும் பயங்களை போக்கி விடுகிறார் மேலும் கர்ப்ப காலங்களில் வரும் சந்தேகங்களை போக்கும் வகையில் ஒரு வீடியோ சிடியூம் தந்து விடுகிறார் இதில் கர்ப்ப காலங்களில் ஏற்படும் சந்தேகங்கள் அவற்றிற்கான தீர்வுகள் மேலும் கர்ப்ப காலங்களில் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள் , உண்ண வேண்டிய உணவு பதார்த்தங்கள் என அனைத்து விஷயங்களைப் பற்றியும் மருத்துவர் பாலகுமாரியே ஆலோசனை கூறுகிறார் (உடற்பயிற்சி முதற்கொண்டு முறையாக அவரே செய்து காட்டுவது அவரது சிரத்தையைக் காட்டுகிறது) . கர்ப்பக் காலங்களில் செய்ய வேண்டிய பரிசோதனைகளுக்கு தேவையான எல்லா வசதிகளும் இங்கேயே இருப்பதால் வேறு எங்கும் அலைய வேண்டிய அவசியமும் கிடையாது. கே.எஸ் மருத்துவமனையின் குறை என்று சொல்ல வேண்டுமானால் அதன் இருப்பிடத்தை சொல்லலாம் , முதல் முறையாக நீங்கள் அந்த மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தால் தயவு செய்து கூகில் மேப்பில் வழி பார்த்துக்கொண்டு செல்லவும் இல்லாவிட்டால் திருவிழாவில் காணாமல் போன குழந்தை போலாகிவிடுவீர்கள் அத்தனை சந்துகளை கடக்க வேண்டியிருக்கும் , மருத்துவமனை கட்டிடம் கண்ணில் தெரிந்ததும் மனம் யுரேகா யுரேகா என்று கத்துவதை தவிர்க்க முடியாது ;-). ஆனால் அங்கு கிடைக்கும் சிகிச்சையையும் , மற்ற நன்மைகளையும் பார்க்கும்பொழுது இந்த குறை கண்டிப்பாக பெரிதாக தெரியாது.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் முபாரக் மற்றும் யாஸ்மின் இருவரது குடும்ப நபர்களும் அப்பொழுது அங்கே இல்லை ஆதலால் நானும் முபாரக்கும் மட்டுமே வாசலில் காத்திருந்தோம் இதற்கிடையில் முபாரக்கிடம் இருந்து மற்றும் ஒரு ஆச்சரியமான விஷயம் தெரிய வந்தது பிரசவ வலி தாங்காமல் தனக்கு சிசேரியன் செய்து விடுமாறு மருத்துவரை யாஸ்மினே வற்புறுத்தி இருக்கிறார் ஆனால் மருத்துவர் பாலகுமாரி சுகப்பிரசவம் ஆகும் வாய்ப்பு உள்ளவர்களுக்கு எக்காரணம் கொண்டும் சிசேரியன் செய்ய மாட்டோம் என்று மறுத்து விட்டாராம்
(இதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை , இப்படியெல்லாம் மருத்துவர்கள் இன்னும் இருக்கிறார்களா என்ன). இதைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது தீடீரென்று யாஸ்மினின் அலறல் குரல் நின்று விட்டிருந்தது எங்கள் இருவருக்கும் படபடப்பு அதிகரித்திருந்தது சிறிது நேரத்திற்கெல்லாம் மகப்பேறு மருத்துவர் அகிலா (துணை மருத்துவர்) முகமெல்லாம் புன்னகையாக " Normal Delivery , Girl baby ,weight 2.93 kgs " என்ற படி குழந்தையை முபாரக்கின் கைகளில் தந்தார் , எங்கள் வாழ்நாளில் அந்த தருணத்தை மறக்கவே இயலாது , மகப்பேறு மருத்துவர்களின் உன்னதம் அந்த சில நொடிகளில் புரிந்து போனது , மகப்பேறு மருத்துவர்கள் இறைவனால் ஆசீர்வதிக்க பட்டவர்கள் , தினம் தினம் இப்படி பூப்போன்ற மழலைகளை பூமிக்கு வரவேற்கும் தொழில் தான் எத்துனை மகத்துவம் வாய்ந்தது.
கே.எஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் மட்டும் அல்ல அங்கு வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் தாங்கள் செய்யும் சேவையில் ஒரு சிரத்தை இருக்கிறது உதாரணத்திற்க்கு ஒன்று கூறலாம் , நான் முன்பே கூறியது போல முபாரக் மற்றும் யாஸ்மினின் குடும்ப நபர்கள் வர முடியாததால் அவர்கள் இருவர் மட்டுமே குழந்தையை பார்த்துக்கொள்ளும் நிலை உருவானது , யாஸ்மின் பிரசவ வலி வந்து மருத்துவமனையில் சேர்ந்தது அதிகாலை மூன்று மணி இதனால் அவர்கள் இருவரும் முதல் நாள் இரவிலிருந்தே தூங்கவில்லை , குழந்தை பிறந்த அன்று இரவு குழந்தை மிக அதிகமாக அழுதிருக்கிறது அன்றும் நடுநிசி வரையில் அவர்களால் தூங்க முடியவில்லை தொடர்ச்சியாக இரண்டாவது நாள் கண் விழிப்பது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொண்ட நர்சுகள் தாங்களாகவே முன்வந்து குழந்தையை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று கூறி குழந்தையை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கவனித்து கொண்டார்கள். வெறும் பணத்திற்காக மட்டும் சேவை புரியும் எந்த ஒரு மருத்துவமனையிலும்
இத்தகைய சேவையை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இதையெல்லாம் யோசித்து தான் நான் இந்த வலைப்பதிவை எழுத தீர்மானித்தேன் , நல்ல விஷயங்களுக்கு விளம்பரம் தேவையில்லை அது தானாகவே மக்களை சென்றடைந்து விடும் இருப்பினும் எனது சகோதரி யாஸ்மினையும் குட்டித் தேவதை அஃப்சராவையும் பார்க்கும் பொழுதெல்லாம் கே.எஸ் மருத்துவமனையின் பால் ஒரு நன்றி உணர்ச்சி பெருகுகிறது, கே.எஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் திருமதி பாலகுமாரி மற்றும் திருமதி அகிலா இருவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்ளவே இந்த பதிவு.....

ஆச்சரியம் தரும் நம்பிக்கைகள் அனைத்து இடங்களில் இருக்கிறது
ReplyDelete